காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நெரிஞ்சிப்பேட்டை ஊருக்குள் தண்ணீர் புகுந்தது

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நெரிஞ்சிப்பேட்டை ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

Update: 2022-08-26 21:28 GMT

அம்மாபேட்டை,

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நெரிஞ்சிப்பேட்டை ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலையில் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர், உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பேரூராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர். வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரை செக்கானூர் கதவணை, நெரிஞ்சிப்பேட்டை கதவணை, கோனேரிப்பட்டி உள்ளிட்ட கதவணைகளில் அப்படியே வெளியேற்றுவார்கள்.

இந்த நிலையில் நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் தண்ணீர் திறக்கப்படாததால் நேற்று இரவு 7 மணி அளவில் காவிரி ஆற்று தண்ணீர் நெரிஞ்சிப்பேட்டை தேர்வீதி, பெருமாள் கோவில் வீதி ஆகிய பகுதிகளை சூழ்ந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கதவணை திறக்கப்பட்டது

உடனே இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி, அந்தியூர் தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தாசில்தார் கதவணை மின்நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கட்டளை கதவணை கதவுகள் திறக்கப்பட்ட பிறகே தண்ணீர் வடிய தொடங்கியது.

இதுகுறித்து கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, '2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் கூட தண்ணீர் அதே மட்டத்தில் தான் செல்லும். ஆனால் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் வரும்போது வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் நாங்கள் புலம்பி கொண்டிருந்தோம். நெரிஞ்சிப்பேட்டை கதவணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படாததால்தான் தண்ணீர் ஊருக்குள் போகிறது என்று அறிந்த பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கூறினோம். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நெரிஞ்சிப்பேட்டை கதவணை கதவுகளை திறந்ததால் ஊருக்குள் போகும் தண்ணீர் வடிய தொடங்கியது. எனவே வெள்ளப்பெருக்கு காலங்களில் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்