பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நீலகிரியில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2023-07-25 20:45 GMT

மேட்டுப்பாளையம்

நீலகிரியில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்ப்பட்டுள்ளது.

தொடர் மழை

மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. தற்போது நீலகிரியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் இரவு அணைக்கு வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 89 அடியாக இருந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்தது.

தண்ணீர் வெளியேற்றம்

நீலகிரியில் மழை அளவு குறைந்ததால், மதியத்திற்கு மேல் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 96.50 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டத்தை ஒரே சீராக வைத்திருக்க அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் ெவள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டும் போது, அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்குவதால், அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

எனவே தேக்கம்பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை, பெத்திக்குட்டை மற்றும் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பவானி ஆற்றின் கரையோரப் பகுதியில் வருவாய் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்