ரூ.133.32 கோடி மதிப்பீட்டில் பல்வேறுதுறை சார்ந்த திட்டங்கள்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
5 புதிய தொழிற்பேட்டைகள், 5 பொது வசதி மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;

சென்னை,
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.133.32 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம், தொழிலாளர்கள் தங்கும் விடுதி, 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் 5 பொது வசதி மையங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ரூ.57.72 கோடி செலவில் சேலம் மாவட்டம், அரியகவுண்டம்பட்டியில் அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம், கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி, காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 170.21 ஏக்கர் பரப்பில் ரூ.40.27 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 5 தொழிற்பேட்டைகள் மற்றும் சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.35.33 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 5 பொது வசதி மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.3.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலினையும், முதல் தொகுதி நூலினையும் வெளியிட்டார்.
மேலும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில், பட்டு விவசாயிகள், பட்டு நூற்பாளர்கள் மற்றும் விதைக்கூடு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்த இரண்டு பட்டு விவசாயிகள், சிறந்த மூன்று விதைக்கூடு உற்பத்தியாளர்கள், சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுத்தொகையாக 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.