வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார் மீட்பு

உப்பிலியபுரம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் மீட்கப்பட்டது.

Update: 2022-10-12 20:07 GMT

உப்பிலியபுரம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் மீட்கப்பட்டது.

தரைப்பாலத்தில் வெள்ளம்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் (வயது 47). நேற்று காலை மாராடியில் நடந்த துக்க காரியத்துக்காக ஜான் காரில் சென்றார். காரை அவரே ஓட்டி உள்ளார்.

பின்னர் அவர் துக்க காரியம் முடிந்தவுடன் சொந்த வேலையாக நாமக்கல் நோக்கி சென்றார். அப்போது, ஜான் கட்டப்புளி அய்யாற்று தரைப்பாலத்தை கடக்க முயன்றார்.

சமீபத்தில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த நிலையில் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்ததால், கார் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஒரு பாறையில் சிக்கி நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான் காரின் கதவை திறந்து தண்ணீரில் குதித்து கரையேறி உயிர்தப்பினார்.

மீட்பு

பின்னர் கார் தண்ணீரில் மீண்டும் இழுத்து செல்லப்படாமல் இருக்க, ஜான் கிராம இளைஞர்கள் உதவியுடன் காரில் கயிறுகட்டி பாலத்தில் உள்ள காங்கிரீட் கட்டையில் கட்டி வைத்தார்.

தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, ஆற்றில் சிக்கி இருந்த கார், ரோப் மூலம் கட்டப்பட்டு மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அடிக்கடி இந்த தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடுவதால் அங்கு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்