தேசியக்கொடி அறுந்து விழுந்ததால் பரபரப்பு

கும்பகோணத்தில், எம்.எல்.ஏ. முன்னிலையில் நடந்த விழாவில் தேசியக்கொடி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-15 21:56 GMT

கும்பகோணம்;

கும்பகோணத்தில், எம்.எல்.ஏ. முன்னிலையில் நடந்த விழாவில் தேசியக்கொடி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேசியக்கொடி சிக்கிக்கொண்டது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் போஸ்டர் டவுன்ஹால் வெளி வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழாவின் ஓராண்டு நிறைவு நாள் விழா நேற்று காலை நடந்தது.விழாவுக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கும்பகோணம் முதன்மை சார்பு நீதிபதி வெங்கடேசபெருமாள் கலந்து கொண்டார்.தேசியக்கொடியை 8-வது பட்டாலியன் தேசியமாணவர் படை கமாண்டிங் அதிகாரி கர்னல் எஸ்.சந்திரசேகரன் ஏற்றினார். அப்போது கம்பத்தின் உச்சியை நோக்கி கொடி சென்றபோது மலர்களால் நிரப்பப்பட்ட தேசியக்கொடி கயிற்றின் நடுவே சிக்கிக் கொண்டது.

அறுந்து விழுந்தது

அப்போது கொடியை ஏற்றிய கர்னல் கடுமையாக முயற்சி செய்தும் தேசிய கொடியோடு கட்டப்பட்ட கயிறு அவிழவில்லை. இதனால் அருகில் இருந்த கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகன் தேசியக் கொடியில் இருந்த சிக்கலை சரி செய்ய கயிறை இழுத்தார்.அப்போது கம்பத்தின் உச்சியில் இருந்த தேசியக்கொடி அறுந்து மேலிருந்து கீழே தரையில் விழுந்தது. இதனால் கோபமடைந்த அன்பழகன் எம்.எல்.ஏ. தேசியக்கொடியை கட்டும் பொறுப்பில் இருந்தவரிடம் கோபமாக பேசினார். பின்னர் சரி செய்யப்பட்ட தேசியக்கொடி மீண்டும் ஏற்றப்பட்டது.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்