மாங்குடி, சூரக்குளம் கண்மாய்களில் மீன்பிடி திருவிழா

மாங்குடி, சூரக்குளம் கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மீன்களை அள்ளிய கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-03-26 18:45 GMT

திருப்பத்தூர்

மாங்குடி, சூரக்குளம் கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மீன்களை அள்ளிய கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீன்பிடி திருவிழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மாங்குடி பெரிய கண்மாயில் கடந்த ஆண்டு நீர் நிரம்பிய நிலையில் காணப்பட்டது. அவ்வாறு மழைக்காலங்களில் சேமிக்கப்பட்டிருந்த தண்ணீரை சுற்றியுள்ள பல ஏக்கர் நிலங்களில் கிராம மக்கள் விவசாயம் செய்தனர். தற்போது விவசாய பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கண்மாயில் தண்ணீர் வற்ற தொடங்கியதை தொடர்ந்து கண்மாயில் இருக்கும் மீன்களை பிடிக்க மீன்பிடி திருவிழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனையொட்டி நேற்று கண்மாய் மடையில் கிராம முக்கியஸ்தர்கள் சாமி தரிசனம் செய்து மீன்பிடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பலவகை மீன்கள்

முன்னதாக கண்மாயில் மீன் பிடிக்க மாங்குடி, காரையூர், புதுவளவு, சோளம்பட்டி, திருக்களாபட்டி, சுற்றியுள்ள கிராம மக்கள் கட்சா, வலை, கூடை பரி உள்ளிட்ட பலவகை வலைகளை கொண்டு மீன்பிடித்தனர்.. ஊர் முக்கியஸ்தர் கொடி அசைத்த பின்பு, அனைவரும் உற்சாகமாக கண்மாயில் இறங்கி, போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர். இவர்களுக்கு கெண்டை, விரால், கட்லா, ஜிலேபி போன்ற பல வகையான மீன்கள் அதிக அளவில் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

10 ஆண்டுக்கு பிறகு..

மானாமதுரை அருகே பில்லத்தான் ஊராட்சிக்குட்பட்ட சூரக்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் சூரக்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று அதிகாலை முதல் கண்மாயில் மீன்பிடிக்க காத்திருந்தனர். அதன் பின்னர் ஊர் தலைவர் கொடியசைத்ததும் போட்டி போட்டு கண்மாயில் இறங்கி வலை, ஊத்தா உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களுடன் கிராம மக்கள் மீன்களை பிடிக்க தொடங்கினர். இதில் கட்லா, கெண்டை, கெளுத்தி, விரால் போன்ற மீன்களை பிடித்து சென்றனர். இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டவர்களுக்கு கிடைத்த மீன்கள் ஒவ்வொன்றும் தலா 5 மற்றும் 3 கிலோ எடை கொண்ட மீன்களாக கிடைத்தது. இதையடுத்து அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மேலும் ஒவ்வொருவரும் தலா 2 கிலோ முதல் 5 கிலோ வரை மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்றனர். வீட்டில் மீன்குழம்பு செய்து சாப்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்