மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல் - மீன்களின் விலை உயர வாய்ப்பு

மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு அனைத்து விதமான விசைப்படகுகளும் நேற்று மாலை கரைக்கு திரும்பி விட்டன.

Update: 2023-04-15 01:42 GMT

சென்னை,

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்துக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி, கிழக்குக்கடற்கரை எல்லையான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஏப்ரல் 15-ந்தேதி(இன்று) முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும், மேற்குக்கடற்கரை எல்லையான கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை (61 நாட்கள்) மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மீன்பிடி தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட காலத்தில் தமிழகக்கடலோரப் பகுதிகளில் இருந்து விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கடலுக்குள் செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அனைத்து விதமான விசைப்படகுகளும் நேற்று மாலை கரைக்கு திரும்பி விட்டன. மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில், மீன்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்