பரமக்குடி,
பரமக்குடி நகராட்சி பகுதி எமனேஸ்வரம் கால்வாயில் புல், புதர்கள் மண்டி கிடக்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கழிவுகளை அந்த கால்வாயில் விடுவதால் சேரும், சகதியுமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை கால்வாய்களிலும் திறந்து விடப்பட்டதால் இந்த கால்வாயில் ஏராளமான மீன்கள் உற்பத்தியாகின. இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தூண்டில் போட்டு மீன் பிடித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 தினங்களாக அந்த கால்வாயில் தினமும் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் புழுக்களும் பூச்சிகளும் உற்பத்தியாகி வீடுகளுக்குள் படையெடுத்து வருவதாக அப் பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் குடியிருப்பவர்கள் நகராட்சி அதிகாரிகளிடமும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை என புலம்புகின்றனர். ஆகவே அந்த கால்வாயில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.