நாகை மீனவர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்

இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து நாகை மீனவர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Update: 2022-11-09 19:00 GMT

இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து நாகை மீனவர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 37). இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 21-ந் தேதி நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான அதிகாரிகள் கடந்த மாதம் 27-ந் தேதி நாகை துறைமுகத்திற்கு வந்து துப்பாக்கி குண்டுகள் தாக்கிய விசைப்படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வேலை நிறுத்தம்

இந்த நிலையில் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கண்டித்து நாகை மீனவர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி நேற்று வேலை நிறுத்தம் தொடங்கியது. நாளை(வெள்ளிக்கிழமை) வரை வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நாகை மாவட்டத்தில் 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 600 விசைப்படகுகள், 3 ஆயிரத்து 500 பைபர் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 70 ஆயிரம் மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.

ரூ.3 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு

இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. வேலை நிறுத்தத்தையொட்டி நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடற்படையை கண்டித்து நாளை(வெள்ளிக்கிழமை) நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்