திருச்செந்தூரில் காத்திருப்பு போராட்டம் நடத்திய மீனவர்கள்
திருச்செந்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையோர ஆக்கிரமிப்பு
திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அமலிநகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் 200 பைபர் படகு மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் நகர் பகுதியில் இருந்து அமலிநகருக்கு செல்லும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், புதியதாக சாலை அமைக்ககோரியும் அமலிநகர் மீனவர்கள் திருச்செந்தூர் நகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதி மீனவர்கள் கடந்த 24-ந் தேதி மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் அமலிநகரில் இருந்து பேரணியாக சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
காத்திருப்பு போராட்டம்
இதையடுத்து 2-வது கட்டமாக நேற்று அமலிநகர் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடற்கரையில் சுமார் 200 பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என அமலிநகர் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.