மீனவர்கள் படகுகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்

வருகிற 13-ந் தேதி மீனவர்கள் படகுகளை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும் எனவும், மீறினால் மானியம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-06-07 18:45 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கும் எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆய்வு செய்யப்பட்டு படகின் உறுதி தன்மை, பதிவு சான்றுடன் சரிபார்க்கப்படுகிறது. பின்னர் அதன் அடிப்படையில் மானிய விலையிலான எரிஎண்ணெய் மற்றும் இதர மானியத் திட்டங்களுக்கு நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

13-ந் தேதி ஆய்வு

அந்த வகையில் கடலூரில் நடப்பு 2023-ம் ஆண்டில் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளை வெளிமாவட்டங்களில் இருந்து வருகை புரியும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வின் போது, மீனவர்கள் தங்களது படகுகளை தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி, துறையால் அறிவுறுத்தப்பட்ட பச்சை வர்ணம் பூசப்பட்டு, படகின் பதிவு எண்ணை தெளிவாக எழுதி ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்திட வேண்டும். ஆய்வின்போது படகு பதிவு குறித்த அனைத்து ஆவணங்கள் மற்றும் அதற்கான நகல்கள், தொலைதொடர்பு கருவிகள், உயிர் காப்பு மிதவை, உயிர்காப்பு கவசம் ஆகியவற்றை மீனவர்கள் ஆய்வுக்குழுவிடம் அவசியம் காண்பிக்க வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படாத எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளுக்கு மானிய விலையிலான எரிஎண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், படகு உரிமையாளர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள படகு உரிமையாளர்கள் அனைவரும் தங்களது பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத படகுகளை தவறாமல் ஆய்வுக்குழுவின் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்