மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்திய தேசிய மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-08-27 18:45 GMT


மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்திய தேசிய மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பழங்குடியினர் பட்டியல்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரன் நாட்டார் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தில் காணாமல் போன மீனவ கிராமங்களை மீண்டும் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பேச்சுவார்த்தை குழு

அதேபோல மாநில மீன்வளத்துறை அலுவலகங்கள், மீன்வள பல்கலைக்கழகம், கடல் சார் வாரிய துறைமுகங்களில் 50 சதவீதம் இட ஒதுக்கீடுடன் மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். செருதூர்-வேளாங்கண்ணி இடையே வெள்ளையாறு கடல் முகத்துவாரத்தில் உள்ள இரு புறங்களிலும், கருங்கல்பாறை அமைக்க வேண்டும். ஆற்றின் உட்பகுதியை தூர்வாரி சீரான படகு போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி இருப்பது போதுமானதாக இல்லாததால் இன்னும் அதிகப்படுத்தி வழங்க வேண்டும். இந்தியா-இலங்கை மீன்பிடி தொழில் பிரச்சினைக்கு அமைதி பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவை மீண்டும் தொடங்க வேண்டும்.

கடன் தள்ளுபடி

2021-23-ம் ஆண்டுகளில் பிடிபட்ட தமிழக மீனவர்களின் விசை படகுகளை விடுவிக்க வேண்டும். இந்தியா-இலங்கை கடல் மயில் எல்லை காலப்போக்கில் சுருங்கி விட்ட காரணத்தால், மீண்டும் எல்லை மறுவரையறை செய்ய வேண்டும்.

பொதுமக்களின் பங்களிப்புடன் நாகை நம்பியார் நகரில் நமக்கு நாமே திட்டத்தில் துறைமுகம் அமைப்பதற்காக மீனவர்கள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நாகை கீச்சாங்குப்பம் மீனவர் கிராமம் முதல் அக்கரைப்பேட்டை வரை சேதமடைந்த அழைத்தடுப்பு சுவரை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்