மாமல்லபுரத்தில் தேசிய மீன் விவசாயிகள் கருத்தரங்கம்

மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெறுகிற தேசிய மீன் விவசாயிகள் கருத்தரங்கத்தை மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-11 08:35 GMT

கருத்தரங்கம்

தேசிய மீன் விவசாயிகள் தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டு தேசிய மீன் விவசாயிகள் தின கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசும்போது, "மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் சார்பாக மீன் வளர்ப்பிற்கு அர்ப்பணிப்புடன் தங்களது பங்களிப்பை வழங்கும் மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளின் மகத்தான சேவையை தேசம் அங்கீகரிக்கும் விதமாக தேசிய மீன் விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. மீன்வளத் துறையின் குறிப்பிடத்தக்க சாதனைகளை முன்னிலைப்படுத்தவும், தொழில்துறையில் புதுமை மற்றும் தொழில்முனைவை வளர்க்கவும் இந்த நிகழ்ச்சிகள் பயன்படும்" என்றார்.இந்த கருத்தரங்கில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மீனவர்களுடன் இணைய வழியாக மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கலந்துரையாடல் செய்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

கண்காட்சி

கருத்தரங்கம் நடைபெற்ற நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் மீன் வளர்ப்பு, இறால் மீன்களுக்கான தீனிகள், மீன் எண்ணெய், மீன் ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட மீன்கள், மீன் வலைகள், மீன்பிடி சாதனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில் நுட்பங்களின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 50 கண்காட்சி அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டு இருந்தன. இந்த 2 நாள் கண்காட்சி அரங்குகளை மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா திறந்து வைத்து 2 நாள் கண்காட்சி குறித்த விழா மலரினையும் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை இணை மந்திரிகள் டாக்டர் எல்.முருகன், சஞ்சீவ்குமார் பல்யான், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து வந்த மீன் பண்ணையாளர்கள், மீன் வளர்ப்பாளர்கள், மீனவர்கள், வல்லுநர்கள், அதிகாரிகள், விஞ்ஞானிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்