பாரூரில்ரூ.4½ கோடியில் மீன் குஞ்சு வளர்ப்பு மையம், அலுவலக கட்டிடம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
பாரூரில் ரூ.4½ கோடி மதிப்பில் கட்டப்பட்ட மீன் குஞ்சு வளர்ப்பு மையம் மற்றும் அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
காவேரிப்பட்டணம்:
பாரூரில் ரூ.4½ கோடி மதிப்பில் கட்டப்பட்ட மீன் குஞ்சு வளர்ப்பு மையம் மற்றும் அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திறப்பு விழா
பர்கூர் அருகே பாரூர் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மரபணு மேம்படுத்தப்பட்ட திலேபியா மீன்குஞ்சு வளர்ப்பு மையம் மற்றும் அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்த வைத்தார். மாவட்ட கலெக்டர் சரயு, மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மீன் வளர்ப்பு தொட்டிகளை பார்வையிட்டனர்.
இதுகுறித்து கலெக்டர் சரயு கூறியதாவது:- கடந்த 2015-ம் ஆண்டு கிருஷ்ணகிரி அரசு மீன் விதைப்பண்ணையில் மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட திலேபியா உற்பத்தி மையம் நிறுவப்பட்டு, மீன் விதை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.
பொருளாதார நிலை மேம்படும்
இந்த நிலையில் மீனவர்களின் கோரிக்கைளை நிறைவேற்றும் வகையில் தற்போது மீன் வளர்ப்பு குஞ்சு மையம் திறக்கப்பட்டுள்ளது. பாரூர் அரசு மீன் பண்ணையில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேபியா குஞ்சு பொரிப்பகம், நாற்றங்கால் குளம், சமநிலைப்படுத்தும் தொட்டி, பொதிப்பக்கூடம், அலுவலக கட்டிடத்துடன் ஆய்வகம், பாதுகாப்பு சுவர், திறந்தவெளி கிணறு, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் மீனவர்களுக்கு தரமான புரதச்சத்து நிறைந்த மீன் விதைகள் உரிய நேரத்தில், நியாயமான விலையில் கிடைக்கும். மீன் விதைகளின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மீன் உற்பத்தி மற்றும் மீன் பிடிகளை கையாளுதல், சுகாதாரமான நிலையில் மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்தல், மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிக வருவாய் ஈட்ட உதவும்.
மேலும் மீனவர், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதன் மூலம் மீனவர்களின் சமூக பொருளாதார நிலை மேம்படும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, தர்மபுரி மண்டல மீன்வளத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி, உதவி இயக்குனர் யுவராஜ், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் தமிழரசன், ஆய்வாளர் பவதாரணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் தமிழ்செல்வி சுந்தரமூர்த்தி, சாந்தமூர்த்தி, கோடீஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வித்யா சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுரேஷ், பெரியசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.