கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதலாம் ஆண்டு மாணவர்கள்
பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, கல்லூரிக்குள் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலாம் ஆண்டு வகுப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு, தனியார் கலை கல்லூரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. இதையடுத்து 2-ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவ-மாணவிகள் உற்சாகமுடன் கல்லூரிக்கு வந்தனர். இந்த நிலையில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் தொடங்கியது.
பள்ளிக்கூடத்தில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்த மாணவ-மாணவிகள் முதன் முதலாக கல்லூரிகளில் காலடி எடுத்து வைத்தனர். கல்லூரி படிப்பு எப்படி இருக்குமோ? என்ற கேள்வி மனதில் தோன்ற மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர்.
பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரிக்கு வந்த மாணவிகளை சீனியர் மாணவிகள் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். கல்லூரி முதல்வர் லட்சுமி மற்றும் பேராசிரியர்கள் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கான வகுப்பறைகளுக்கு அழைத்து சென்று அமர வைத்தனர்.
நேற்று முதல் நாள் என்பதால் முதலாம் ஆண்டு மாணவிகள் சற்று பதற்றமாக காணப்பட்டனர். அவர்களை கல்லூரி பேராசிரியர்கள் அமைதிப்படுத்தி, கல்லூரி நாட்களை எவ்வாறு இனிமையாக கழிக்கலாம் என்று எடுத்துரைத்து உற்சாகப்படுத்தினர். அதன் பின்னர் மாணவிகள் சகஜமாக சக மாணவிகளுடன் பேசி பழக தொடங்கினர். மேலும் சீனியர் மாணவிகளும் முதலாம் ஆண்டு மாணவிகளிடம் நட்பாக பேசினர்.