76 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி கரூர் வருகை
76 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி கரூர் வருகைதர உள்ளார் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
முதல்-அமைச்சர் கரூர் வருகை
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகையையொட்டி அனைத்து துறை அலுவலர்கள், திட்டப்பணிகளின் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்திற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று கரூர் மாவட்டத்திற்கு முதன்முறையாக ஜுலை 2--ந்தேதி வருகை தர உள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பான அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும்.
தயார்நிலை
கடலில் காற்றாலைகள் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளன, நிறுவப்பட்டுள்ளன. அதற்கான திட்ட செலவுகள் எவ்வளவு என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை. தமிழகத்தில் கடலில் காற்றாலைகள் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து களத்திற்கு சென்று ஆய்வுகள் செய்யப்பட்டன. தமிழகத்தில் அந்த பணிகள் மேற்கொள்வதற்கு காலங்கள் உள்ளது. திட்ட மதிப்பீடுகளும் கூடுதலான செலவினங்களும் ஏற்படும்.
ஏனென்றால் தரையில் இருந்து 50 கிலோ மீட்டருக்கு உள்ளே சென்றுதான் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 யூனிட்டுக்கு உற்பத்திக்கு எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கில் கொள்ளப்படும். அதன்பிறகுதான் அந்த திட்டம் இறுதிவடிவம் பெறும். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனாவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வரக்கூடிய காலங்களில் படுக்கைகள் உள்பட அனைத்தும் தயார்நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூர் மாவட்டத்திற்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு வருகை தருவதையொட்டி, திருமாநிலையூர் அருகே விழா நடைபெறும் இடத்தில் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர் பார்வையிட்டார்.
ஊட்டச்சத்து பெட்டகம்
முன்னதாக தாய்சேய் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாநகராட்சி கஸ்தூரிபாய் தாய்சேய் நல விடுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலகு சார்பில், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை அங்காடியினை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக முதுகுத் தண்டுவடம் பாதித்த 8 பேருக்கு தலா ரூ.99 ஆயிரத்து 777- வீதம் ரூ.7 லட்சத்து 98 ஆயிரத்து 216- மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் 11 பேருக்கு தலா ரூ.78 ஆயிரத்து 750- வீதம் ரூ.8 லட்சத்து 66 ஆயிரத்து 250 மதிப்பிலான, இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் ஆக மொத்தம் 19 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 64 ஆயிரத்து 466 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.