முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. ‘இந்த சிகிச்சை இதர அரசு ஆஸ்பத்திரிகளிலும் விரிவுபடுத்தப்படும்' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-28 05:34 GMT

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு குணமடைந்த ஈரோட்டை சேர்ந்த மணி என்பவரை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியும், குரோம்பேட்டை ரேலா ஆஸ்பத்திரியும் இணைந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி போடப்பட்டது. மேலும் ஸ்டான்லி, மதுரை அரசு ஆஸ்பத்திரி, கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த வகையில் ரூ.4 கோடி செலவில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அறுவை சிகிச்சை அரங்கம் தயார் செய்யப்பட்டது. அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அங்கே பொறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் கடந்த 10-ந் தேதியன்று ஈரோட்டைச் சேர்ந்த மணி (வயது 51) என்பவருக்கு முதல் முறையாக வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை செய்ய தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.30 முதல் ரூ.35 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் மூலம் இலவசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஏற்கனவே ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமே செய்யப்பட்டு வந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, தற்போது ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் செய்யப்படுகிறது. அடுத்ததாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியிலும் இந்த அறுவை சிகிச்சை செய்யவும், மற்ற ஆஸ்பத்திரிகளில் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2008-ம் ஆண்டு கருணாநிதியால் தொடங்கப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகளில் இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இந்த திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுநாள் வரை 1,505 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

1,760 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. 1.42 கோடி குடும்பங்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள். 1 குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை பயனளித்துக் கொண்டிருக்கின்ற இந்த திட்டத்தில் அதிகபட்சமாக இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.35 லட்சம் வரை இன்றைக்கு செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் சாந்திமலர், ரேலா நிறுவனம் மற்றும் மருத்துவ மையத்தின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா, சென்னை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் தேரணிராஜன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையரக உறுப்பினர் செயலாளர் டாக்டர் காந்திமதி, சென்னை மருத்துவ கல்லூரி இரைப்பை, குடல், கல்லீரல் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் நாகநாத்பாபு, கல்லீரல் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்