விதிமுறைகளுக்கு உட்பட்டே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது

எச்சரிக்கை விடுத்தும் படகை நிறுத்தாமல் சென்றதால் விதிமுறைகளுக்கு உட்பட்டே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று நாகையில், இந்திய கடற்படை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-10-27 18:45 GMT

வெளிப்பாளையம்:

எச்சரிக்கை விடுத்தும் படகை நிறுத்தாமல் சென்றதால் விதிமுறைகளுக்கு உட்பட்டே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று நாகையில், இந்திய கடற்படை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

துப்பாக்கி சூடு

காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(வயது 37) இவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரியை சேர்ந்த வீரவேல்(35), செல்வக்குமார்(45), செல்லத்துரை(45), தரங்கம்பாடியை சேர்ந்த கண்ணன்(40), மோகன்ராஜ்(35), விக்னேஷ்(28). செருதூரை சேர்ந்த மகேந்திரன்(33), காரைக்காலை சேர்ந்த பிரசாத்(25) சுதீர்(29), பாரத்(26) ஆகிய 10 பேர் கடந்த 15-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

21-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய கடற்படை வீரர்கள் மீனவர்கள் சென்ற படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டு இருந்ததால் கடற்படையினரின் எச்சரிக்கை மீனவர்களுக்கு தெரியவில்லை. இதனால் தொடர்ந்து சென்ற மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

பூம்புகார் மீனவர் படுகாயம்

இந்த துப்பாக்கி சூட்டில் படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரவேல்(வயது 31) என்பவர் மீது குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 9 மீனவர்களும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து மீனவர் அளித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்திய கடற்படை அதிகாரி விசாரணை

இந்த நிலையில் இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் விஷால் குப்தா தலைமையில் கடற்படையினர் நேற்று நாகை துறைமுகத்திற்கு வந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் ஆய்வு மேற்கொண்டனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து கமாண்டர் விஷால் குப்தா விசாரணை நடத்தினார்.

47 குண்டுகள்...

அப்போது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தால் விசைப்படகில் 47 குண்டுகளால் துளையிடப்பட்ட ஓட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் 9 மீனவர்களிடமும் இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் விஷால் குப்தா விசாரணை நடத்தினர்.

விதிமுறைகளுக்கு உட்பட்டே துப்பாக்கி சூடு

பின்னர் அவர் கூறுகையில், நடுக்கடலில் சென்ற விசைப்படகை சந்தேகத்தின் பேரில் இந்திய கடற்படையினர் நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் படகை நிறுத்தாமல் மீனவர்கள் சென்றதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது. அதன் பின்னர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என தெரிவித்தார்.

மொத்தம் 6 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின்னர் இந்திய கடற்படை அதிகாரி மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்