தீ விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

குடியாத்தத்தில் தீ விபத்தில் சிக்கிய மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Update: 2022-09-09 17:26 GMT

குடியாத்தம் பிச்சனூர் அப்பு சுப்பையர் வீதியை சேர்ந்தவர் சுசிலா (வயது 80), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது கணவர் முருகேசன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சுசிலா வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று மாலையில் வீட்டின் கதவை தாழிட்டுக் கொண்டு ஹாலில் சுசிலா இருந்தார். அப்போது வீட்டின் முன் பகுதியில் இருந்த சமையலறையில் தீ பற்றி மளமளவென வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே மயங்கிய நிலையில் இருந்த சுசிலாவை மீட்டனர். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்