சிவகாசியில் பட்டாசு விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது.

Update: 2022-09-30 19:07 GMT

சிவகாசி, 

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது.

தீபாவளி பண்டிகை

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இறுதி கட்ட உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு மிகவும் குறைந்த அளவே பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மூலப்பொருட்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் உற்பத்தியில் இந்த ஆண்டு 60 சதவீதம் மட்டுமே நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளி மாநில வியாபாரிகள்

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து விதிகள் கடுமையாக இருந்த நிலையில் வடமாநில பட்டாசு வியாபாரிகள் நேரில் வந்து ஆர்டர் கொடுக்காமல் இணையம் வழியாக வியாபாரத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இந்த கொரோனா பரவல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் வடமாநில வியாபாரிகள் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு நேரில் வந்து பார்த்து புதிய வகை பட்டாசுகளை தேர்வு செய்து வருகிறார்கள். இங்குள்ள விடுதிகளில் வெளிமாநில வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இடைத்தரகர்கள்

பஸ் மற்றும் ரெயில்களில் சிவகாசி வரும் பட்டாசு மொத்த வியாபாரிகளை குறி வைத்து சில இடைத்தரகர்கள் தங்கள் மோசடி வேலைகளை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. குறைந்த விலையில் பட்டாசுகளை வாங்கி தருவதாக கூறி தரம் இல்லாத பட்டாசுகளை வாங்கி கொடுத்து வருவதாகவும் புகார்கள் எழுகிறது.

சிலர் பணத்தை பெற்றுக்கொண்டு உரிய பட்டாசுகளை அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் நடமாடும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுத்து பட்டாசு வியாபாரிகள் பாதிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சூடு பிடித்தது

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 23 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் வெளி மாநில வியாபாரிகள் மற்றும் வெளியூர் வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.

இதுகுறித்து பட்டாசு வியாபாரி சேவகன் கூறியதாவது, எப்போது இல்லாத அளவுக்கு மூலப்பொருட்களின் விலை உயர்வால் பட்டாசுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தரத்தில் எந்த குறைபாடும் இருக்காது. எனவே விலை அதிகம் என்று பார்க்காமல் ஆண்டுக்கு ஒரு முறை வாங்கப்படும் பட்டாசுகளை எப்போதும் போல் இந்த ஆண்டும் வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே இதை நம்பி உள்ள 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்