தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்

வேலூரில் நடந்த தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-16 11:59 GMT

மாரத்தான் ஓட்டம்

இந்தியா முழுவதும் மீட்பு பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 14-ந்தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அதனை நினைவுகூறும் விதமாக தீத்தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சி என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்புத்துறையினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வடமேற்கு மண்டல தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார், வேலூர் மாவட்ட அலுவலர் அப்துல்பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கி மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ரொக்கப்பரிசு, சான்றிதழ்

வேலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தொடங்கிய சுமார் 10 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் வேலூர் மாநகராட்சி அலுவலகம், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, டோல்கேட், தொரப்பாடி மத்திய ஜெயில், பாகாயம், விருப்பாட்சிபுரம், சங்கரன்பாளையம், வேலப்பாடி, ஆரணி சாலை வழியாக வந்து தீயணைப்பு நிலையத்தில் நிறைவு பெற்றது. இதில், 120 பெண்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில், வேலூர் மாவட்ட தீயணைப்புத்துறை உதவி அலுவலர்கள் முகுந்தன், பழனி, வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்