காட்டு யானைகள் வருவதை தடுக்க தீ மூட்டி கண்காணிப்பு

கூடலூர் அருகே நெற்கதிர்களை காட்டு யானைகள் மிதித்து சேதப்படுத்தின. தொடர்ந்து யானைகள் வருவதை தடுக்க இரவில் தீ மூட்டி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-12-18 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் அருகே நெற்கதிர்களை காட்டு யானைகள் மிதித்து சேதப்படுத்தின. தொடர்ந்து யானைகள் வருவதை தடுக்க இரவில் தீ மூட்டி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெற்பயிர்கள் சேதம்

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வயல் பரப்புகளில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையே முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவில் வயல்களுக்குள் புகுந்து,நெற்கதிர்களை மிதித்து சேதப்படுத்தி வருகின்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சில விவசாயிகளின் நெற்கதிர்களை காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து வனத்துறையினரிடம் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வனவர் செல்லதுரை தலைமையிலான வனத்துறையினர் தொரப்பள்ளி, குனில் வயல், புத்தூர் வயல் உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

தீ மூட்டி கண்காணிப்பு

தொடர்ந்து காட்டு யானைகள் வரும் வழித்தடங்களை கண்டறிந்து, அவை வயல்களுக்குள் வருவதை தடுக்க கடும் குளிரில் இரவில் தீ மூட்டி கண்காணித்து வருகின்றனர். சில சமயங்களில் வயல்களுக்குள் நுழைய முயற்சி செய்யும் காட்டு யானையை விரட்டியடித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கூடலூர் பகுதியில் மழைக்காலம் முடிவடைந்து விட்டது.

இதனால் பசுந்தீவனங்களுக்காக காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை தேடி வருகிறது. தற்போது நெல் விளைந்து காணப்படுவதால் காட்டு யானைகள் விளைநிலங்களை தேடி வருகிறது. இதனால் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் உடனடியாக தகவல் கொடுக்கும் பட்சத்தில் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்