கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து
கொங்கணாபுரம் அருகே கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
எடப்பாடி:-
கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம்பட்டி அருகே உள்ள தோட்டக்காடு பகுதியில் மணி (வயது 58) என்பவருக்கு சொந்தமான தென்னை நார் மூலம் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தென்னை நாரில் இருந்து பல்வேறு அளவிலான கயிறுகள் தயாரிக்கப்பட்டு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் தொழிற்சாலையில் வேலைகள் நடைபெற்று வந்தது. நண்பகல் நேரத்தில் திடீரென தொழிற்சாலையின் ஒரு பகுதி தீப்பற்றி எரியத்தொடங்கியது. அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அங்கு பற்றிய தீ தொழிற்சாலை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் அதை அணைக்க முயன்ற போதும் தீயின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீயை அணைக்க முடியவில்லை.
இது குறித்து எடப்பாடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்குள் தொழிற்சாலையில் இருந்த கயிறு தயாரிக்கும் எந்திரம் மற்றும் மூலப்பொருள்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தொழிற்சாலை அருகே கொட்டப்பட்டிருந்த உலர்ந்த நாரில் பற்றிய தீ தொழிற்சாலைக்கும் பரவியதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்தும், சேத விவரம் குறித்தும் கொங்கணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.