செங்காநத்தம் மலையில் தீ விபத்து
செங்காநத்தம் மலையில் தீ விபத்து ஏற்பட்டதில் மரங்கள் கருகின.
வேலூரில் உள்ள மலைகளில் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மலைகளில் உள்ள மரம், செடி, கொடிகள் தீயில் கருகி நாசமாகிறது. கடந்த வாரம் சார்பானமேடு மலையில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சத்துவாச்சாரி மூலக்கொல்லையில் உள்ள செங்காநத்தம் மலையில் சமூக விரோதிகள் தீ வைத்துள்ளனர்.
வெயிலின் வெப்பத்தால் காய்ந்து காணப்பட்ட செடி, கொடி, புற்கள் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. மலையில் தீ வைக்கும் தொடர் சம்பவங்களால் மலையடிவாரங்களில் வசிக்கும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மலைகளுக்கு தீ வைப்பதை தடுக்கவும், தீ வைத்து அட்டூழியம் செய்யும் சமூகவிரோதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.