திருப்புவனம்,
திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய் உள்புறம் விவசாயம் அதிகம் நடைபெற்று வருகிறது. இதில் வாழை, கரும்பு உள்ளிட்டவை முக்கியமாகும். 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். இவர்கள் இப்பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பதிவு செய்து, கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற்று கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தினகரன் என்பவர் கரும்பு வயல் வழியாக செல்லும் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டு வயலில் விழுந்து தீப்பற்றியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தீயில் எரிந்து சேதமானது.