தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தீ விபத்து
நாமக்கல் தோட்டக்கலைத்துறை தொழில்நுட்ப ஆதார் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்தன.
தொழில்நுட்ப ஆதார் மையம்
நாமக்கல்லில் மாவட்ட ஆயுதப்படை மைதானம் செல்லும் வழியில், மாவட்ட தோட்டக்கலை தொழில் நுட்ப ஆதார் மையம் செயல்படுகிறது. இங்கு இரவு காவலாளியாக சிங்காரம் (வயது 55) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அலுவலகத்துக்குள் இருந்து புகை வந்து உள்ளது. வெளியே சென்றிருந்த இரவு காவலாளி சிங்காரம் வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றார். ஆனால் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால், அணைக்க முடியவில்லை. இது குறித்து அருகில் உள்ள நல்லிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
15 கம்ப்யூட்டர்கள் எரிந்து சேதம்
இதையடுத்து போலீசார் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த 15 கம்ப்யூட்டர்கள், 2 மடிக்கணினிகள், ஏ.சி.கம்பரசர்கள், ஜெராக்ஸ் எந்திரம், 150-க்கும் மேற்பட்ட அலுவலர்களின் எஸ்.ஆர்.புத்தகம், ஆவணங்கள் என பல்வேறு பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
இதற்கிடையே தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தீ விபத்துக்கான காரணம் குறித்தும், எரிந்துபோன ஆவணங்கள், பொருட்கள் பற்றியும் கேட்டறிந்தார்.
இந்த தீ விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேதமதிப்பு குறித்தும் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். இச்சம்பவம் நேற்று காலையில் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.