ஈரோட்டில் தீவிபத்து; வீட்டில் இருந்த பொருட்கள் நாசம்- அமைச்சர் ஆறுதல்

ஈரோட்டில் தீவிபத்து; வீட்டில் இருந்த பொருட்கள் நாசம்- அமைச்சர் ஆறுதல்

Update: 2023-02-21 21:10 GMT

ஈரோடு திருநகர்காலனி சாமியப்பா வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). இவருடைய மனைவி கீதா (40). முருகேசன் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றார். கீதா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். கிரைண்டரில் மாவு அரைக்க போட்டிருந்தார். அப்போது திடீரென கிரைண்டரில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதைத்தொடா்ந்து அவர் பார்த்தபோது தீ பற்றி எரிந்தது. சில நிமிடங்களில் அருகே இருந்த மிக்சி மற்றும் துணிகளிலும் தீ பரவி எரிந்தது.

இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

இதற்கிடையே அந்த பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அந்த வீட்டுக்கு சென்று கீதாவிடம் ஆறுதல் கூறினார். மேலும், உரிய நேரத்தில் வந்து தீயை அணைத்து கொடுத்த தீயணைப்பு படை வீரர்களை அமைச்சர் சி.வி.கணேசன் பாராட்டினார். அப்போது தி.மு.க. மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்