வீட்டில் மெழுகுவர்த்தியை குரங்கு தட்டிவிட்டதால் தீ விபத்து
வீட்டில் மெழுகுவர்த்தியை குரங்கு தட்டிவிட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது40). இவரது வீட்டில் குழந்தைகள் மெழுகுவர்த்தியை எரிய வைத்து அதில் கம்பி மத்தாப்புகளை பற்ற வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் நுழைந்த குரங்கு ஒன்று மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது. பயந்து ஓடிய குழந்தைகள் இதுகுறித்து வெளியில் இருந்த தாய் அழகுராணியிடம் கூறினர். அவர் வீட்டுக்குள் வருவதற்குள் மெழுகுவர்த்தியில் இருந்து தீ அருகில் உள்ள பட்டாசு மீது பட்டு வெடித்து தீ பிடித்தது. தகவல் அறிந்து சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீவிபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.