வனவிலங்குகளை வேட்டையாடஎலக்ட்ரானிக் கருவிகள் விற்ற கடைக்காரருக்கு அபராதம்

Update: 2023-07-07 19:00 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முயல், மான், உடும்பு போன்ற வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பென்னாகரம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டு வருவதாக மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவின்பேரில் உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் வின்சென்ட், வேட்டை தடுப்பு சரக அலுவலர் ஆலயமணி, பென்னாகரம் வனவர் முனுசாமி அடங்கிய சிறப்பு குழுவினர் பென்னாகரம் பகுதிகளில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முள்ளுவாடி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் முயலை வேட்டையாடுவதற்கு பேட்டரியின் மூலம் அதிர்வலையை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், ஓயர் மற்றும் மஞ்சள் நிற மின்விளக்கு ஆகியவை விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதனையடுத்து கடை உரிமையாளரான முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த ஷாநவாஸ் (வயது 50) என்பவரை சிறப்பு படையினர் விசாரணைக்காக மாவட்ட வன அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு எச்சரித்து ஷாநவாஸ்க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்