வெவ்வேறு விபத்துகளில் நிதி நிறுவன ஊழியர்- தி.மு.க. பிரமுகர் பலி
வெவ்வேறு விபத்துகளில் நிதி நிறுவன ஊழியர்- தி.மு.க. பிரமுகர் உயிரிழந்தனர்.
துவரங்குறிச்சி:
நிதி நிறுவன ஊழியர்
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் சரவணன்(வயது 23). தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மதியம் நல்லூரில் இருந்து துவரங்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் சமயபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மல்லன்(வயது 74). தி.மு.க. பிரமுகரான இவர் அக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் செல்லும் சாலையில் உள்ள போக்குவரத்து காலனியில் குடியிருந்து வந்தார். நேற்று இரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் இருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அக்கரைப்பட்டி பிரிவு சாலையை கடக்க முயன்ற போது பழனியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மல்லன் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.