குறுவை சாகுபடி விதை நெல்லை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்

குறுவை சாகுபடி விதை நெல்லை 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும் என்று குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-30 19:15 GMT

திருவாரூர்;

குறுவை சாகுபடி விதை நெல்லை 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும் என்று குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூர்வாரும் பணிகள்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-ராமமூர்த்தி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 3-வது முறையாக மேட்டூரில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. அதேநேரம் தூர்வாரும் பணிகளை முன்னதாக முடிக்க வேண்டும். குறுவைக்கு தேவையான கடன் உதவிகளை கூட்டுறவு சங்கங்கள் வழங்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட வேண்டும். குறுவைக்கான தண்ணீரை முறை வைக்காமல் வழங்க வேண்டும்.

மணல் கடத்தல்

தம்புசாமி: அரசின் உதவித்தொகை பெறுவதற்கான வங்கிகணக்கு தொடங்க குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும் என்று வங்கிகள் வலியுறுத்த கூடாது. ஆறுகளில் உரிய அனுமதியின்றி மணல் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.மருதப்பன்: குறுவை சாகுபடி விதை நெல்லை வேளாண்துறை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். வடவாறு சி.எம்.பி. வாய்க்காலை தூர்வார வேண்டும். மும்முனை மின்சாரம் கூடுதலாக வழங்க வேண்டும். பருத்தி, எள் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும்.

பகுதிநேர கால்நடை ஆஸ்பத்திரி

பாலகுமாரன்: நன்னிலம், பேரளம், பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் வீடுகள், வணிக வளாகம் ஆகியவற்றுக்கு மின்மீட்டர் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் அதிகளவில் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. கீரனூர் பகுதியில் பகுதி நேர கால்நடை ஆஸ்பத்திரி திறக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக பருத்தி பாதிப்புக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குனர் முகமது ரபிக், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா். 

Tags:    

மேலும் செய்திகள்