பண்டிகை கால பலகாரங்களை சுகாதாரமற்ற முறையில் தயாரித்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் செந்தில்ராஜ்

பண்டிகை கால பலகாரங்களை சுகாதாரமற்ற முறையில் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-07 18:45 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார பலகாரங்களை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பலகாரங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து விதமான இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் விற்பனைகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. எனவே, பலகாரங்கள் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு நிபந்தனைகளைப் பின்பற்றி தரமான மற்றும் பாதுகாப்பான உணவு நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிக ஸ்வீட் ஸ்டால்கள் உட்பட அனைத்து இனிப்பு மற்றும் கார தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே பொது மக்களுக்கு வினியோகம் செயய வேண்டும். இந்த வணிகர்கள் மட்டுமல்லாது அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தில் உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

இனிப்பு பலகார பெட்டிகளை விற்பனை செய்யும் வணிகர்கள் அந்த பெட்டியில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்ப பயன்படுத்துதல் கூடாது. பணியாளர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து தான் பணியாற்ற வேண்டும். அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

புகார்

பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான புகார்கள் இருப்பின், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் 0461-2900669 என்ற எண்ணிலோ அல்லது 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் அலுவலக வாட்ஸ் அப் எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்