பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் மண்டல சிறு தானிய திருவிழா-2 நாட்கள் நடக்கிறது

Update: 2023-05-25 18:45 GMT

தர்மபுரி:

பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா நாளை மறுநாள் தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறுதானிய திருவிழா

சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி தர்மபுரி மாவட்ட வேளாண்அறிவியல் நிலையம், தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை இணைந்து நடத்தும் மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா வருகிற 28, 29-ந் தேதிகளில் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. விழாவை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் 70-க்கும் மேற்பட்ட கருத்து கண்காட்சி அரங்குகள், கருத்தரங்குகள், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் உரையாடல், பேராசிரியர்களின் ஆலோசனைகள், நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள் இடம்பெறுகின்றன.

தமிழ்நாட்டின் சிறு தானிய மாவட்டமாக கருதப்படும் தர்மபுரியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 115 ஏக்கர் பரப்பளவில் சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் விளையும் கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை மற்றும் வரகு போன்ற சிறுதானிய பயிர்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் கொண்டு வரவும், சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கவும் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

ஒரு நாளில் 2,500 விவசாயிகள்

திருவிழாவையொட்டி நடக்கும் கண்காட்சியில் தொழில் முனைவோர், விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டும் குடிசை தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த திருவிழாவில் ஒரு நாளில் 2 ஆயிரத்து 500 விவசாயிகள் பங்கேற்க சிறப்பு வசதி மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த திருவிழாவில் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது போல் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை துறை மூலமாக தொடர்ச்சியாக சிறுதானிய விழாக்கள், விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்படும்.

இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.

பேட்டியின் போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்