பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிங்கம்புணரி
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்கொடுங்குன்றநாதர் கோவில்
சிங்கம்புணரி அருகே திருக்கையிலாய பரம்பரை குன்றக்குடி ஆதீனத்திற்கு உட்பட்ட குயிலமுகாம்பிகை உடனமர் திருக்கொடுங்குன்றநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆசியுடன் கோவில் முதல் ஸ்தானிகர் பரம்பரை சிவாச்சாரியார் உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினரால் கோவில் பேஸ்கார் கேசவன் முன்னிலையில் கோவில் முன்பு அமைந்துள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரிஷப கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை கொடி கம்பத்திற்கு காட்டப்பட்டு காப்புகட்டுதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டப படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜை மற்றும் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
திருக்கல்யாணம்
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 30-ந்தேதி வள்ளல் பாரி விழா நடைபெறுகிறது. தொடர்ந்து மே 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருத்தேர் நான்கு ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிறைவு விழா மே 5-ந் தேதியன்று தேனாடி மதுபுட்கரணியில் தீர்த்தம் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்று சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி தேவஸ்தானம் பிரான்மலை திருகொடுங்குன்றநாதர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பிரான்மலை கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.