திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் உள்ள அழகு சவுந்தரி அம்மன் கோவில் பங்குனி உற்சவத்தையொட்டி தேர் திருவிழா நடைபெற்றது. கடந்த 27-ந் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படியாக சாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இதையொட்டி பால்குட ஊர்வலம், அலகு காவடி, அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் அழகு சவுந்தரி அம்மனும் எழுந்தருளினர். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.