இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சி கிராமத்தில் மேலத் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மழை வேண்டி கிராம மக்கள் முளைப்பாரி திருவிழா நடத்தினர். இதையொட்டி கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து நேர்த்தி கடனை செலுத்தினர். பூசாரிகள் முத்துவேளார், சுப்பிரமணி செல்வம் ஆகியோர் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் செய்தனர். திருவிழாவில் கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடி கும்மியடித்து முளைப்பாரியை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து பத்திரகாளி அம்மன் கோவில், பெருமாள் கோவில், பிள்ளையார் கோவில், அய்யனார் கோவில் ஆகிய கோவில்களில் வழிபாடு செய்து குளத்தில் கரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராணி வேலுநாச்சியார் நற்பணி மன்றத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.