விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம், இடுபொருட்கள்கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்
நாகையில் குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு, மானிய விலையில் உரங்கள் மற்றும் இடு பொருட்கள் வினியோகத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
நாகையில் குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு, மானிய விலையில் உரங்கள் மற்றும் இடு பொருட்கள் வினியோகத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
குறுவை தொகுப்பு திட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் குறுவை தொகுப்பு திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் இடு பொருட்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் இயல்பாக 4,500 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படும். நடப்பு ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் இதுவரை 35,691 ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இடுபொருட்கள்
தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்துக்கு ரூ.6 கோடியே 46 லட்சத்து 62 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேளாண் உற்பத்தி திறனை அதிகரித்து அதிக மகசூல் பெற்று அதிக லாபமடைய ஒரு ஏக்கருக்கு யூரியா-45 கிலோ, டி.ஏ.பி.-50 கிலோ மற்றும் பொட்டாஷ்-25 கிலோ போன்ற இடுபொருட்கள் 100 சதவீத மானியத்தில் அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
இதற்காக இதுவரை 10,628 விவசாயிகளுக்கு 11,015 ஏக்கருக்கான உரங்கள் வினியோகம் செய்ய பதிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதிக்குள் குறுவை தொகுப்பு திட்டத்தை நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
100 விவசாயிகள்
குறுவைத் தொகுப்புத்திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள், 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள், விதை நிலக்கடலை ஆகியவை 100 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் மாரிமுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.