கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வு 2-வது நாளாக படகு போக்குவரத்து 1½ மணி நேரம் தாமதம்

கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வு காரணமாக 2-வது நாளாக படகு போக்குவரத்து 1½ மணி நேரம் தாமதமானது.

Update: 2022-08-12 18:15 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வு காரணமாக 2-வது நாளாக படகு போக்குவரத்து 1½ மணி நேரம் தாமதமானது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலையும் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். அப்போது, திடீரென கடலில் நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால், காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், 9.30 மணிக்கு கடலில் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து 1½ மணிநேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்பினர். 2-வது நாளாக கடலில் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து தாமதமானது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்