பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு; முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.;
விழுப்புரம்,
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், அந்த பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர்.
இதனிடையே முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள், இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, இம்மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க விழுப்புரம் கோர்ட்டுக்கு தடை எதுவும் இல்லை என்றும், ஜனவரி 24-ந் தேதிக்குள்(நாளை) இவ்வழக்கை முடிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு மேல்முறையீடாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அம்மனு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் ராஜேஷ்தாஸ் மீதான மேல்முறையீட்டு வழக்கு நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல் ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்திவைக்கும்படி முறையிட்டார். அதற்கு மாவட்ட நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ், இவ்வழக்கின் விசாரணை நாளை(அதாவது இன்று) மீண்டும் நடைபெறும் என உத்தரவிட்டார்.