பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் சிறப்பு டிஜிபி தரப்பின் குறுக்கு விசாரணை நிறைவு

பாலியல் தொல்லை வழக்கில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பின் குறுக்கு விசாரணை நிறைவடைந்தது. அரசு தரப்பு சாட்சிகளான 3 போலீஸ் அதிகாரிகளை நாளை ஆஜர்படுத்தும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-06-15 16:46 GMT

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல், குறுக்கு விசாரணையை தொடங்கி 12 நாட்கள் நடத்தியுள்ள நிலையில் அந்த குறுக்கு விசாரணை நிறைவடையவில்லை.

இந்நிலையில் அந்த குறுக்கு விசாரணையை நிறைவு செய்வதற்காக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராகினர்.

குறுக்கு விசாரணை நிறைவு

அதனை தொடர்ந்து பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு குறுக்கு விசாரணையை தொடங்கலாம் என்று நீதிபதி புஷ்பராணி கூறினார். அதன்படி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் தினகரன் ஆஜராகி, பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் 13-வது நாளாக குறுக்கு விசாரணை நடத்தினார். இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி குறுக்கு விசாரணை செய்தார். அதற்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி உரிய பதில் அளித்தார். அதனை நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார்.

காலை 10.40 மணிக்கு தொடங்கிய இந்த குறுக்கு விசாரணை மதியம் 1.30 மணி வரை நடந்தது. அத்துடன் 13 நாட்களாக நடந்த இந்த குறுக்கு விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல், இவ்வழக்கில் அரசு தரப்பு 6-வது சாட்சியான புகார்தாரரின் கணவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி பார்த்திபனிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தார்.

3 போலீஸ் அதிகாரிகளை ஆஜர்படுத்த உத்தரவு

இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு தாக்கல் செய்த மனுவுக்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக நாளை மறுநாள் (அதாவது 17-ந் தேதி) வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அதோடு அன்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகளான போலீஸ் ஐ.ஜி. ரூபேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் பிதுன்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்துமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்