பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.
உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு துறை அலுவலர்களும் திரும்ப படித்து எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வேடியப்பன், குமரேசன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, நில அளவை உதவி இயக்குனர் சேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் சிவகாந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
கல்வியை மேம்படுத்துதல்
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் பெண் குழந்தைகளின் விகிதம் மற்றும் பிறப்பு விகித எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாதம் முதல் செயல்பட உள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கொல்லப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பெண் பாலின விகிதம் குறைவதற்கு பெண் குழந்தைகள் பிறப்பை பதிவு செய்யாமல் விடுதல், பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் இறப்பு, ஆண் குழந்தைகளுக்கான ஆசை, பிறப்பிற்கு முன்பே பாலினம் அறிந்து கருக்கொலை செய்தல் போன்றவை முக்கிய காரணங்களாகும். பெண் மீதான மற்றும் பெண் குழந்தை மீதான வெறுப்பை நீக்கி கொள்ள வேண்டும். ஆண்-பெண் பாலின சமத்துவத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
முன்னுரிமை தர வேண்டும்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கேட்கக்கூடாது. வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. எளிய முறையிலான திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். மாவட்டத்தில் பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.