பெண் வங்கி அதிகாரி காரில் வைத்து பாலியல் பலாத்காரம்

பெண் வங்கி அதிகாரி காரில் வைத்து பாலியல் பலாத்காரம்

Update: 2023-04-18 18:45 GMT

கோவை

திருமண பேச்சு காரணமாக நெருங்கி பழகிய பெண் வங்கி அதிகாரியை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், திருமணத்திற்கு மறுத்த சமையல் நிபுணர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி அதிகாரி

கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவை தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிகிறார். இந்த நிலையில் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நான் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணி புரிகிறேன். இந்த நிலையில் எனது பெற்றோர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 28 வயது நபருடன் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவர் மாலத்தீவில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் நிபுணராக பணிபுரிகிறார்.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எங்கள் இருவருக்கும் நிச்சயம்செய்வது என எங்களின் பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து நாங்கள் இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி பழகி வந்தோம். இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி அவர் என்னை ஆனைக்கட்டிக்கு வரும்படி அழைத்தார்

பாலியல் பலாத்காரம்

இதையடுத்து நாங்கள் இருவரும் ஆனைக்கட்டிக்கு சென்றோம். அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினோம். அப்போது அவர் மது குடித்தார். என்னையும் மது குடிக்கும்படி கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் அதற்கு மறுத்து விட்டேன். இதன்பின்னர் நாங்கள் காரில் வீட்டிற்கு புறப்பட்டு வந்தோம். ஆனால் வீட்டிற்கு வரும் வழியில் அவர், என்னை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

இதன்பின்னர் அவர் மாலத்தீவு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து நாங்கள் செல்போனில் பேசி வந்தோம். இதனிடையே நான் கர்ப்பமானேன். இதுகுறித்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர் திருமணத்திற்கு முன் கர்ப்பம் வேண்டாம், பப்பாளி, அண்ணாசி சாப்பிட்டு கருவை கலைக்கும்படி என்னிடம் கூறினார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

திருமணத்திற்கு மறுப்பு

இந்த நிலையில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகை வரதட்சனையாக கொடுத்தால் தான் திருமணம் செய்வேன் என்று கூறினார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். எனவே என்னை கட்டயாப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், திருமணத்திற்கு மறுத்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த புகாரின் பேரில் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்