வங்கி பெண் ஊழியருக்கு கத்திக்குத்து

நாகர்கோவிலில் குடும்ப தகராறில் வங்கி பெண் ஊழியரை கத்தியால் குத்திய எல்லை பாதுகாப்பு படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-09 19:15 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் குடும்ப தகராறில் வங்கி பெண் ஊழியரை கத்தியால் குத்திய எல்லை பாதுகாப்பு படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

குடும்ப தகராறு

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 46), மிசோரமில் எல்லை பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுபிதா (39) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் 2 மகன்களும் உள்ளனர். சுபிதா வங்கி ஊழியர் ஆவார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி ஜெயராஜ் சொந்த ஊருக்கு வந்தார். ஊருக்கு வந்த சில நாட்களிலேயே கணவன்- மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் 2 பேரும் புகார் அளித்தனர். ஆனால் குழந்தைகளின் நலன் கருதி போலீசார் பேச்சுவார்த்தை மூலம் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

வீசிய கத்தி கழுத்தில் பாய்ந்தது

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த மனைவி சுபிதாவிடம் ஜெயராஜ் தகராறு செய்தார். அப்போது மதுபோதையில் இருந்த அவர் கோபத்தில் திடீரென கத்தியை எடுத்து சுபிதாவை நோக்கி வீசினார். அந்த கத்தி வேகமாக சென்று சுபிதாவின் கழுத்தில் பாய்ந்து கீழே விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதை பார்த்து குழந்தைகள் அலறினர்.

இதைத் தொடர்ந்து மயங்கி விழுந்த சுபிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது

இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசில் சுபிதா புகார் அளித்தார். அதன்பேரில் ஜெயராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குடும்ப தகராறில் வங்கி பெண் ஊழியரை கத்தியால் குத்தியதாக கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்