மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-08-29 20:46 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒரு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். கடந்த கொரோனா கால விடுமுறையின்போது வீட்டில் இருந்து வந்தார். அப்போது கூலித்தொழிலாளியான 43 வயதுடைய அவரது தந்தை மதுபோதையில், வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தனது மகள் என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தொடர்ந்து அவர் இதுபோல் மிரட்டி தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதில் கர்ப்பமான சிறுமிக்கு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் குறைபிரசவத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.

தந்தை தான் காரணம்

இதுகுறித்து புதுக்கோட்டை டவுண் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர். இதில் அவர் தன்னை கர்ப்பமாக்கியது உறவினர் ஒருவர் என கூறியிருக்கிறார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது மாற்றுத்திறனாளியான அவர் தனக்கு இதில் தொடர்பு இல்லை என தெரிவித்துவிட்டார்.

இதனால் போலீசார் சிறுமியிடம் துருவி, துருவி விசாரித்தபோது, கர்ப்பத்திற்கு காரணம் தனது தந்தை தான் எனவும், இதனை வெளியில் சொல்லக்கூடாது என அவர் மிரட்டியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சாகும் வரை சிறை தண்டனை

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது பிளஸ்-2 படித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்