பவானி அருகே கடத்தப்பட்ட லாரி மோதி விவசாயி பலி; டிரைவர் உள்பட 3 பேர் கைது
பவானி அருகே கடத்தப்பட்ட லாரி மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கவுந்தப்பாடி
பவானி அருகே கடத்தப்பட்ட லாரி மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாரி கடத்தல்
சேலம் மாவட்டம் சங்ககரி அருகே உள்ள குள்ளப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர் தனது லாரியை ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் மாட்டு ஆஸ்பத்திரி அருகே உள்ள விஜயகுமார் என்பவரது பட்டறையில் கடந்த 6-ந் தேதி சர்வீஸ்க்காக நிறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் மறுநாள் 7-ந் தேதி காலை விஜயகுமார் பட்டறைக்கு சென்று பார்த்தபோது ராஜேந்திரனின் லாரியை காணவில்லை. யாரோ மர்மநபர் 6-ந் தேதி இரவு பட்டறையில் இருந்த லாரியை கடத்தி சென்றது தெரியவந்தது.
விபத்தில் சிக்கியது
இதுகுறித்து ராஜேந்திரன் சித்தோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் லாரி கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து அதை கடத்தியவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கவுந்தப்பாடி அருகே உள்ள பவானி மெயின் ரோடு உப்புக்கார பள்ளம் பகுதியில் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த விவசாயி அமுதசேகர் (46) என்பவர் மீது லாரி ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.
3 பேர் பிடிபட்டனர்
உடனே அமுதகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் வாகனம் மூலம் கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்ைசக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அமுதசேகர் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே விபத்து நடந்ததும் லாரி நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வாகனங்களில் அந்த லாரியை துரத்தி சென்றனர். பூலப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அந்த லாரியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தார்கள். பின்னர் இதுபற்றி கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாரியில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
கைது
விசாரணையில் அவர்கள் காலிங்கராயன்பாளையம் அணைநாசுவன்பாளையம் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் மகன் தீபக்குமார் (32), மணக்காட்டூர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி மகன் நல்லசிவம் (36), காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த தங்கவேல் மகன் லோகு என்கிற லோகநாதன் (35) ஆகியோர் என்பதும், அவர்கள் மதுபோதையில் இருந்ததும், அவர்கள் வந்த லாரி காலிங்கராயன்பாளையம் மாட்டு் ஆஸ்பத்திரி அருகே பட்டறையில் நிறுத்தப்பட்டிருந்த ராஜேந்திரனின் லாரி என்பதும், அதை அவர்கள் கடத்தி வந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைதுசெய்தனர். பின்னர் 3 பேரும் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதுபற்றி கவுந்தப்பாடி போலீசார் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் கைதான 3 பேரையும் இன்று (திங்கட்கிழமை) போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.