டாஸ்மாக் கடையை மூடக்கோரி உண்ணாவிரதம்

புத்தூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2022-08-23 20:36 GMT
தஞ்சை மாவட்டம் கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி புத்தூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி தஞ்சை மாவட்ட நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் தலைவர் இன்பம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் ராஜேஷ்குமார், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொதுச் செயலாளர் புண்ணியமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

பேச்சுவார்த்தை

அப்போது அவர், மேற்கண்ட கிராமத்தில் விவசாய நிலத்தில் இந்த டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்த டாஸ்மாக் கடை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாகவும் இருக்கிறது. மது அருந்துபவர்கள் விளைநிலங்களில் பாட்டில்களையும், பிளாஸ்டிக் டம்ளர்களையும் வீசி செல்கின்றனர். ஆகவே, இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்றார்.

அவர்களிடம் பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகிற செப்டம்பர் மாதம் 13-ந் தேதி டாஸ்மாக் அதிகாரிகளை அழைத்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.




Tags:    

மேலும் செய்திகள்