தலைமை தபால் நிலையத்தை விவசாயிகள்-இளைஞர்கள் முற்றுகை

தலைமை தபால் நிலையத்தை விவசாயிகள்-இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-06-02 20:14 GMT

மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து தாங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாகவும் கூறினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் மல்யுத்த வீராங்கனைகள் புகார் மீது நடவடிக்கை எடுத்து பிரிஜ்பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வலியுறுத்தி நேற்று காலை திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது தபால்நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து கோஷங்களையும் எழுப்பினார்கள்.

விவசாயிகள் 75 பேர் கைது

இது குறித்து முன்பே தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் கென்னடி தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், தபால் நிலையத்துக்குள் யாரும் நுழைந்துவிடாதபடி இரும்பு தடுப்புகளை வைத்து மறைத்தனர். இதையடுத்து போராட்டம் நடத்திய மாநில தலைவர் அய்யாக்கண்ணு, துணைத்தலைவர் மேகராஜன் உள்பட 74 பேரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றிச்சென்றனர்.

இதனை தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி தலைமை தபால்நிலையத்தை முற்றுகையிட திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார், அவர்களை தபால்நிலையத்துக்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் போலீசார் வைத்து இருந்த இரும்பு தடுப்புக்களை மீது ஏறி குதிக்க முயன்றனர்.

போலீசாருடன் தள்ளு முள்ளு- வாக்குவாதம்

இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று வலுக்கட்டாயமாக வேனில் ஏற்ற முயன்றனர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவானது.

பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சூர்யா, மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து, வேனில் ஏற்றினர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் 10 பெண்கள் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ைகது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்