வாய்க்காலில் இறங்கி புதர்களை அகற்றிய விவசாயிகள்

கொள்ளிடம் அருகே வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-09 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நெற்பயிர்கள் மூழ்கின

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன.வயல்களில் இருந்து தண்ணீர் வடிவதற்கான வடிகால் வசதி சரிவர இல்லை என்றும், இந்த பகுதிக்கு வடிகாலாக திகழும் அழிஞ்சியாறு வாய்க்காலை பொதுப்பணி துறையினர் தூர்வாரவில்லை என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

பலன் இல்லை

வாய்க்காலில் புதர்கள் மண்டி கிடப்பதால் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களை சுற்றி 6-வது நாளாக மழைநீர் தேங்கி உள்ளது என்றும், தண்ணீரில் மூழ்கி உள்ள பயிர்கள் அழுக தொடங்கி உள்ளது என்றும், 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட அழிஞ்சியாறு வாய்க்காலை தூர்வார வேண்டும் என பலமுறை கோரிக்்கை விடுத்தும் பலன் இல்லை என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் வயலில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்றுவதற்காக விவசாயிகள் தாங்களே வாய்க்காலில் இறங்கி புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி கடந்த 3 நாட்களாக நடக்கிறது. இதற்காக 40 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் நிதி திரட்டி புதர்களை அகற்றி வருகிறார்கள்.

அச்சத்துடன்...

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'வாய்க்காலில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதர்களை அகற்றி உள்ளோம். விஷத்தன்மை கொண்ட பாம்புகள் இருப்பதால் அச்சத்துடன் புதர்களை அகற்றி வருகிறோம்.எனவே உடனடியாக பொதுப்பணிதுறை அதிகாரிகள் அழிஞ்சியாறு வாய்க்காலை தூர்வாரி சம்பா பயிர்களை காப்பாற்ற வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்