கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கும் விவசாயிகள்

நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர்.

Update: 2023-01-23 18:45 GMT

நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர்.

இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முப்போக சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது.

டெல்டா பாசனத்திற்காக ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே மே மாதமே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சம்பா அறுவடை பணி

நாகை மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும் பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை தாண்டி பெரும்பாலான இடங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகிவிட்டது.

நாகை, திருமருகல், சிக்கல், செம்பியன்மகாதேவி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைத்து வருகின்றனர்.

நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கின்றனர்

இந்த நிலையில் பெரும்பாலான பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக நெய் குப்பை, கரம்பை, வேளங்குடி, வண்டலூர், வடகரை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மழை பெய்தால் அறுவடை செய்யப்பட்ட நெல் வீணாகி விடும் என்றும், தேவைப்படும் இடங்களில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டி வாடகை, ஆட்கள் கூலி அதிகம்

இதுகுறித்து நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் கூறுகையில், திருமருகல் ஒன்றியம் நெய்குப்பை வருவாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளோம். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அறுவடை செய்துள்ளோம். எங்கள் பகுதியில் கொள்முதல் நிலையங்கள் இல்லை.

அறுவடை செய்த நெல்லை பல கிலோமீட்டர் தூரம் உள்ள மருங்கூர், திருமருகல், எரவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று தான் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் வண்டி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்டவை அதிகமாகிறது.

மன உளைச்சல்

ஒரு மூட்டைக்கு ரூ.50 வரை கூலி கொடுக்க வேண்டியுள்ளது.ஒரு வழியாக பல கிலோமீட்டர் தூரம் கொண்டு வந்தால் கொள்முதல் செய்ய காலதாமதப்படுத்துகின்றனர். இரவு முழுவதும் நெல்லுடன் காத்திருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு காத்து கிடந்தாலும், நெல் மூட்டைகளுக்கு பாதுகாப்பும் இல்லை.

இதன் காரணமாக விவசாயிகளுக்கு பல்வேறு வகைகளில் பணவிரயமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. நெய்குப்பை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்காமல் எங்களது பகுதியில் தற்காலிக கொள்முதல் நிலையங்களையாவது திறக்க வேண்டும் என்றார்.

பெயரளவுக்கு திறக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து வண்டலூர் பகுதியை சேர்ந்த விவசாயி கணேசன் கூறுகையில், எந்த ஆண்டுகளும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நெற்பயிர்கள் நன்கு விளைச்சல் கண்டுள்ளது. கடும் பனிப்பொழிவு, பூச்சி தாக்குதல், உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி நெற்பயிர்களை அறுவடை செய்துள்ளோம்.

இந்த நெல்லை விற்பனை செய்வதற்கு எங்கள் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தோம். இதுகுறித்து கலெக்டர் உத்தரவிட்டும், இன்னும் திறக்கப்படவில்லை.தற்போது பெயரளவுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்

நெற்பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படாதபடி நல்ல முறையில் வளர்ந்து வந்தாலும், பராமரிப்பு, இடுபொருள் செலவுகள் அதிகமாகி விட்டன. இவ்வளவு கடினங்களையும், தாண்டி அறுவடை செய்தால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

தற்போது மழை பெய்தால் நெல்மணிகள் அனைத்தும் முளைத்து வீணாகிவிடும். கஷ்டப்பட்டு காய வைத்து உள்ளோம். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். இல்லையென்றால் குறைந்த விலைக்கு நெல்லை வியாபாரிகளிடம் விற்கும் அவல நிலை ஏற்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்