4 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம்: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்

குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-03 18:31 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 வழிச்சாலை பணி

காவல்கிணறு முதல் ஒழுகினசேரி மற்றும் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை 4 வழிச்சாலை பணிகள் நடக்கிறது. இதில் காவல்கிணறு முதல் ஒழுகினசேரி வரையிலான 4 வழிச்சாலை பணிகள் முடிந்துள்ளன.

முன்னதாக 4 வழிச்சாலை பணிக்காக 23 வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் 13 வருவாய் கிராம பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டது. மீதமுள்ள 10 வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தர்ணா

இந்த நிலையில் 4 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு தொடர்பான கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலை நிலமெடுப்பு அதிகாரி ரேவதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வேல்ராஜ், பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, பத்மதாஸ், விஜி, தாணுபிள்ளை, பெரியநாடார், முருகேசபிள்ளை, தங்கப்பன் மற்றும் நிலம் கொடுத்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இழப்பீடு வழங்குவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் நிலம் கொடுத்தவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடன்பாடு

இதை தொடர்ந்து இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கலெக்டர் அரவிந்த் கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதுபற்றி விவசாய பிரதிநிதிகளிடம் கேட்டபோது, "4 வழிச்சாலைக்காக நிலம் கொடுத்தவர்களில் 10 வருவாய் கிராம பகுதியில் உள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு நிர்ணயம் செய்துள்ள தொகை 380 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டி உள்ளது. அந்தத் தொகை கொடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை எந்த உத்தரவாதமும் தரவில்லை. எனவே இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்